






கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
"தீராதவள்"
எனக்கான வார்த்தைகளை
நீ முடிவு செய்கையில்
நான் தேர்கிற மெளனம்
மிக வலிமையானது.
ஒரு வயோதிகப் பிச்சைக்காரனைப்
புறந்தள்ளிய அலட்சியத்துடன்
நீ நடக்கும்பொழுது,
அவனுக்கு நிழல் தரும் மரத்தின்
திடத்துடன் உன்னைச் சந்திக்கும்.
உரத்த குரல் எழுப்பும்
மல்யுத்த வீரனின் சவாலுடன்
நீ திமிர்த்திருக்கையில்,
நடுங்கும் கைகளுடன் உணவிடும்
தாயின் கனிவுடன் உன்னை நேரிடும்.
தன் இரவிற்கான போர்வையினை
ஒரு நாடோடியிடமிருந்து
இரவலாகப் பெற்றுக்கொண்டு
உன்னை உறுதியாய் எதிர்கொள்ளும்-
தனித்து வரும்
ஒற்றை யானையின் கோபத்துடனும்,
பிடிபடா வண்னத்துப் பூச்சியின் சாதுர்யத்துடனும்.
-தமிழச்சி தங்கபாண்டியன்.
No comments:
Post a Comment